ஏகஇறைவனின் திருப்பெயரால்....
يَمْحَقُ اللّهُ الْرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللّهُ لاَ يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
2:276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்
மீண்டும் தலை தூக்கிய கந்து வட்டி காட்டு தர்பார்.
சில மனிதர்களின் வறுமைநிலை பார்ப்பவர்களின் கண்களை கசியச் செய்து விடும் கல்நெஞ்சையும் கரையச் செய்து விடும் ஆனால் வட்டி தொழில் செய்பவர்களுடைய கண்கள் மட்டும் கசியாது, கல் நெஞ்சு கரையாது. அதனால் தான் உள்ளங்களைப் பார்க்கக்கூடிய உலக அதிபதி அல்லாஹ் மனிதாபிமானத்தை மொத்தமாக மாய்க்கும் வட்டியை தடை செய்தான்.
வட்டித் தொழில் (?) செய்பவர்களின் நெஞ்சத்தில் அறவே இறக்கம் இருப்பதில்லை என்பதற்கு கடந்த 2009ல் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி அவர்கள் தான் சந்தித்த வழக்குகளில் தன் மனதை மிகவும் பாதிக்கச்செய்தது வட்டி சம்மந்தமான வழக்குகள் என்றுப்பேட்டி அளித்திருந்தார்.
எரியும் வீட்டில் உருவியது லாபம் என்பதைப்போல கந்து வட்டியில் சிக்கியவனிடம் உருவியது லாபம் என்று நினைத்து சட்டி, பொட்டி, தட்டு, முட்டு சாமான்கள் வரை அள்ளிக்கொண்டுப் போய் விடுவார்கள், சில நேரங்களில் மானத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள்.
கந்து வட்டிக்காரர்களின் கொடுமையால் மானத்தையும், உயிரையும் இழக்கும் நிகழ்வுகள் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் அதிகரித்து அரசு தலமைச்செயலகத்தின் வாசல்கதவை முட்டும் அளவுக்கு சென்றது அதனால் 2003ல் அப்போதைய ஜெயலலிதா அரசு கந்து வட்டி தடுப்புச் சட்டம் இயற்றி கந்துவட்டித் தொழிலுக்கு ஆப்புவைத்தது. இதனால் கந்துவட்டி கல்நெஞ்சர்கள் சிறிதுகாலம் தலைமறைவாகி தற்போது மீண்டும் தலை தூக்கி பழைய நிலைக்கே வளர்ந்து விட்டனர்.
வருகின்ற தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான வியூகங்களை வகுத்து செயல்படுவதிலேயே கடந்த ஐந்து வருடங்களில் அதிக நேரத்தை எடுத்துக் கொண்ட கலைஞர் அவர்கள் கந்து வட்டிக்காரர்கள், கள்ளச் சாராயப் பேர்வழிகள் போன்ற சமூக விரோதிகளின் அத்துமீறலை தன் பொறுப்பில் உள்ள காவல்துறையின் மூலம் ஒடுக்குவதற்குப் போதுமான சட்டமியற்றி செயல்படுவதற்கு நேரம் போதவில்லை ?.
கலைஞர் ஆட்சியில் தமிழகத்தில் நாமக்கல் என்ற முழு மாவட்டத்தையுமே கந்து வட்டிக் காரர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள் என்றால் நம்புவீர்களா ? நம்பித் தான் ஆக வேண்டும் !
மாத வட்டி, வார வட்டி, தின வட்டி, மணி வட்டி, ரன் வட்டி, மீட்டர் வட்டி என்று நாமக்கல்லில் இருந்து தான் வட்டி பல பெயர்களில் தமிழகம் முழுவதும் தொற்று வியாதி போல் பற்றிப் பரவியது.
கடந்த 2009ல் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் வாரவட்டி பாக்கிக்காக கூலி தொழிலாளியின் மகள் ஒருத்தி கந்துவட்டி கயவர்களால் கற்பழித்து அதை செல்போனில் பதிந்து குறுந் தகடுகளாக்கி விற்பனை செய்தும், இணையத்தில் விட்டும் காசாக்கியதை தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பள்ளிப்பாளையம் கிளைச்செயலாளர் வேலுச்சாமி மேற்படி குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காரர்களின் போராட்டம் வலுப்பெற்று அதனால் அன்று சட்டமன்றத்தில் கந்துவட்டி கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க தீவிர நடிவடிக்கை எடுக்கப்படும் என்று வாய் திறந்த கலைஞர் அன்றிலிருந்து இன்றுவரை வட்டி விஷயமாக மீண்டும் வாய் திறக்கவே இல்லை.
சமீபத்தில் வியாசர்பாடியைச் சேர்ந்த வியாபாரி ஆனந்த கோபால் என்பவர் வேல்ராஜ் என்பவரிடம் கந்து வட்டிக்கு ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஒரு வருடத்திற்குள் அசலும் வட்டியுமாக ஒன்பது லட்சம் ரூபாய் வரை செலுத்திவிட்டு இத்துடன் முடித்துக் கொள்ளும்படி அவரிடம் கேட்டுள்ளார். அதற்கவர் இதுவரை வட்டியே நீ முழுமையாக செலுத்தவில்லை அசலும் வட்டியுமாக இன்னும் 6 லட்சம் மீதம் உள்ளது என்றுக்கூறி அனுப்பிவிட்டு அவரைப் பின் தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்றவர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டுப் பத்திரம், ஆட்டோ ஆர்சி புக், மகள் பெயரில் கல்யாணத்திற்காக போட்டு வைத்திருந்த இன்ஷூரன்ஸ் பான்ட், இரண்டு ப்ளாங் செக், மற்றும் முன்கூட்டியே கையில் கொண்டுவந்த 20 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய வெற்றுப் பேப்பரில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு எஸ்கேப்பாகி விட்டார்.
எல்லாம் போய்விட்டது மிஞ்சியது உயிரும், மானமும் தான் அதையும் அடுத்தக் கட்டத்தில் அவனே வந்து எடுப்பதற்குள் எதாவது ஒரு முடிவை மேற்கொண்டாக வேண்டும் என்று நினைத்த ஆனந்த கோபால் தன் மகனுடன் பிப்ரவரி 25 அன்று சென்னை காவல்துறை ஆனையர் ராஜேந்திரனை சந்தித்து நடந்து முடிந்த கந்து வட்டி வேல்ராஜின் வரம்பு மீறலை கண்ணீர் மல்க கூறி உயிருக்கும், மானத்திற்கும் பாதுகாப்புக் கேட்டுள்ளார். சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் உடனடியாக வியாசர்பாடி காவல்நிலைய ஆய்வாளர் புருஷோத்தமனுக்கு உத்தரவுப் பிறப்பித்து வேல்ராஜை கைதுசெய்து நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
அதனடிப்படையில் வேல்ராஜ் கைது செய்யப்பட்டு இதே மாதிரி இன்னும் எத்தனைப் பேரிடம் வரம்பு மீறி உள்ளார் என்ற விசாரனையும் நடந்து வருகிறது. ஒரு வகையில் விபரம் தெரியாமல் கந்துவட்டியின் சதிவலையில் வீழ்ந்து விட்டாலும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்யாமல் காவல் துறை உயர் அதிகாரியை அணுகி பாதுகாவல் கோரியதற்காக ஆனந்த கோபாலை பாராட்டலாம்.
கந்து வட்டிக்காரர்களின் வரம்புமீறும் செயலுக்கு இந்திய சட்டம் துணை நிற்பதே முக்கியக் காரணமாகும் அரசு வங்கிகளைத் தவிற தனியார் வட்டி நிறுவனங்கள் தொகைக்கேற்ற அடமானப் பொருட்களின் பேரில் வருடத்திற்கு 9 சதவிகிதம் வட்டிப் பெறலாம் என்றும், அடமானப் பொருட்கள் அல்லாமல் கொடுத்தால் 12 சதவிகிதம் வட்டிப் பெறலாம் என்றும் சட்டமிருப்பதால் கந்து வட்டிக் காரர்கள் எந்த அடமானப் பொருட்களும் பெறாமல் கடனைக் கொடுத்து விட்டு அதற்காக அதிக வட்டியை அவர்களே நிர்ணயம் செய்துகொண்டு அடியாட்களை அமர்த்திக்கொண்டு லோக்கல் போலீஸை கவனிக்க வேண்டிய முறையில் கவனித்துக்கொண்டு ரவுடியிஷத்தின் மூலமே அசலையும் வட்டியையும் பெறுகின்றனர்.
1957ல் இயற்றப்பட்ட தமிழ்நாடு கடன் கொடுப்போர் சட்டத்தின் 3வதுப் பிரிவில் கடன் பெற்றோரை உடல் ரீதியாக, மன ரீதியாக தொந்தரவு செய்யாமல் கடனை வசூலிக்க வேண்டும் என்றும் மீறினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், முப்பது ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையும் விதிக்கப்படும் என்றும் சட்டமிருக்கிறது.
ஆனால் உடல் ரீதியாக, மன ரீதியாக கொடுத்த டார்ச்சரை சாட்சி இல்லை என்று வக்கீலை வைத்து நிராகரிக்கலாம் என்பதால் தான் ஜெயலலிதா ஆட்சியில் கந்து வட்டிக்கு சட்டத் திருத்தம் கொண்டு வராமல் தடுப்புச்சட்டம் இயற்றி மொத்த கந்து வட்டியையும் தடைசெய்தார். ஆட்சி மாறியதும் தடுப்புச் சட்டம் செயலிழந்து முந்தைய சுரண்டல் சட்டம் தாமாக அமலுக்கு வந்து விட்டது.
மனிதர்கள் இயற்றிய இந்த சட்டங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாற்றம் பெறும் அவ்வாறு மாற்றம் பெறும் பொழுதெல்லாம் மனித சமுதாயத்தில் ஒரு சாராருக்கு அது ஆதரவாகவும் மற்றொரு சாராருக்கு பாதகமாகவும் அமைந்து விடுவதை மேற்காணும் நிகழ்வுகள் மூலம் பார்க்கிறோம் ஆனால் உலக அதிபதி ஏகஇறைவனின் சட்டம் உலகம் முடியும் காலம் வரை எந்த ஒரு சாராருக்கும் பாதகமில்லாமல் அனைவருக்கும் சாதகமாகவே இருக்கும் என்பதற்கு வட்டியை அழித்து தேவையுடையோருக்கு தர்மத்தையும், வட்டியில்லாக் கடனையும் கடமையாக்கி திருப்பிக் கொடுக்க முடியாதோருக்கு விட்டு விடும்படிக் கூறிய கருணையாளன் அல்லாஹ்வின் சட்டம் மகத்துவமானது.
அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். திருக்குர்ஆன் 2:276.
அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான்... திருக்குர்ஆன் 2: 245.
அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது. திருக்குர்ஆன் 2:280.
மேற்காணும் வேதவாக்கு சட்டமாக அமல் படுத்தப்படும் நாடுகளில் மேற்காணும் சித்ரவதைகள் கடன் பெறும் ஏழைகளுக்கு நிகழ்வதில்லை.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்