சனி, செப்டம்பர் 17, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

يَمْحَقُ اللّهُ الْرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللّهُ لاَ يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

2:276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்



மீண்டும் தலை தூக்கிய கந்து வட்டி காட்டு தர்பார்.

சில மனிதர்களின் வறுமைநிலை பார்ப்பவர்களின் கண்களை கசியச் செய்து விடும் கல்நெஞ்சையும்  கரையச் செய்து விடும் ஆனால் வட்டி தொழில் செய்பவர்களுடைய கண்கள் மட்டும் கசியாது, கல் நெஞ்சு கரையாது. அதனால் தான் உள்ளங்களைப் பார்க்கக்கூடிய உலக அதிபதி அல்லாஹ் மனிதாபிமானத்தை மொத்தமாக மாய்க்கும் வட்டியை தடை செய்தான்.

வட்டித் தொழில் (?) செய்பவர்களின் நெஞ்சத்தில் அறவே இறக்கம் இருப்பதில்லை என்பதற்கு கடந்த 2009ல் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி அவர்கள் தான் சந்தித்த வழக்குகளில் தன் மனதை மிகவும் பாதிக்கச்செய்தது வட்டி சம்மந்தமான வழக்குகள் என்றுப்பேட்டி அளித்திருந்தார்.

எரியும் வீட்டில் உருவியது லாபம் என்பதைப்போல கந்து வட்டியில் சிக்கியவனிடம் உருவியது லாபம் என்று நினைத்து சட்டி, பொட்டி, தட்டு, முட்டு சாமான்கள் வரை அள்ளிக்கொண்டுப் போய் விடுவார்கள், சில நேரங்களில் மானத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள்.

கந்து வட்டிக்காரர்களின் கொடுமையால் மானத்தையும், உயிரையும் இழக்கும் நிகழ்வுகள் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் அதிகரித்து அரசு தலமைச்செயலகத்தின் வாசல்கதவை முட்டும் அளவுக்கு சென்றது அதனால் 2003ல் அப்போதைய ஜெயலலிதா அரசு கந்து வட்டி தடுப்புச் சட்டம் இயற்றி கந்துவட்டித் தொழிலுக்கு ஆப்புவைத்தது. இதனால் கந்துவட்டி கல்நெஞ்சர்கள் சிறிதுகாலம் தலைமறைவாகி தற்போது மீண்டும் தலை தூக்கி பழைய நிலைக்கே வளர்ந்து விட்டனர்.

வருகின்ற தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான வியூகங்களை வகுத்து செயல்படுவதிலேயே கடந்த ஐந்து வருடங்களில் அதிக நேரத்தை எடுத்துக் கொண்ட கலைஞர் அவர்கள் கந்து வட்டிக்காரர்கள்கள்ளச் சாராயப் பேர்வழிகள் போன்ற சமூக விரோதிகளின் அத்துமீறலை தன் பொறுப்பில் உள்ள காவல்துறையின் மூலம் ஒடுக்குவதற்குப் போதுமான சட்டமியற்றி செயல்படுவதற்கு நேரம் போதவில்லை ?.  

கலைஞர் ஆட்சியில் தமிழகத்தில் நாமக்கல் என்ற முழு மாவட்டத்தையுமே கந்து வட்டிக் காரர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள் என்றால் நம்புவீர்களா ? நம்பித் தான் ஆக வேண்டும் !

மாத வட்டி, வார வட்டி, தின வட்டி, மணி வட்டி, ரன் வட்டி, மீட்டர் வட்டி என்று நாமக்கல்லில் இருந்து தான் வட்டி பல பெயர்களில் தமிழகம் முழுவதும் தொற்று வியாதி போல் பற்றிப் பரவியது. 

கடந்த 2009ல் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் வாரவட்டி பாக்கிக்காக கூலி தொழிலாளியின் மகள் ஒருத்தி கந்துவட்டி கயவர்களால் கற்பழித்து அதை செல்போனில் பதிந்து குறுந் தகடுகளாக்கி விற்பனை செய்தும், இணையத்தில் விட்டும் காசாக்கியதை தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பள்ளிப்பாளையம் கிளைச்செயலாளர் வேலுச்சாமி மேற்படி குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காரர்களின் போராட்டம் வலுப்பெற்று அதனால் அன்று சட்டமன்றத்தில் கந்துவட்டி கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க தீவிர நடிவடிக்கை எடுக்கப்படும் என்று வாய் திறந்த கலைஞர் அன்றிலிருந்து இன்றுவரை வட்டி விஷயமாக மீண்டும் வாய் திறக்கவே இல்லை.

சமீபத்தில் வியாசர்பாடியைச் சேர்ந்த வியாபாரி ஆனந்த கோபால் என்பவர் வேல்ராஜ் என்பவரிடம் கந்து வட்டிக்கு ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஒரு வருடத்திற்குள் அசலும் வட்டியுமாக ஒன்பது லட்சம் ரூபாய் வரை செலுத்திவிட்டு இத்துடன் முடித்துக் கொள்ளும்படி அவரிடம் கேட்டுள்ளார். அதற்கவர் இதுவரை வட்டியே நீ முழுமையாக செலுத்தவில்லை அசலும் வட்டியுமாக இன்னும் 6 லட்சம் மீதம் உள்ளது என்றுக்கூறி அனுப்பிவிட்டு அவரைப் பின் தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்றவர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டுப் பத்திரம், ஆட்டோ ஆர்சி புக், மகள் பெயரில் கல்யாணத்திற்காக போட்டு வைத்திருந்த இன்ஷூரன்ஸ் பான்ட், இரண்டு ப்ளாங் செக், மற்றும் முன்கூட்டியே கையில் கொண்டுவந்த 20 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய வெற்றுப் பேப்பரில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு எஸ்கேப்பாகி விட்டார்.

எல்லாம் போய்விட்டது மிஞ்சியது உயிரும், மானமும் தான் அதையும் அடுத்தக் கட்டத்தில் அவனே வந்து எடுப்பதற்குள் எதாவது ஒரு முடிவை மேற்கொண்டாக வேண்டும் என்று நினைத்த ஆனந்த கோபால் தன் மகனுடன் பிப்ரவரி 25 அன்று சென்னை காவல்துறை ஆனையர் ராஜேந்திரனை சந்தித்து நடந்து முடிந்த கந்து வட்டி வேல்ராஜின் வரம்பு மீறலை கண்ணீர் மல்க கூறி உயிருக்கும், மானத்திற்கும் பாதுகாப்புக் கேட்டுள்ளார். சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் உடனடியாக வியாசர்பாடி காவல்நிலைய ஆய்வாளர் புருஷோத்தமனுக்கு உத்தரவுப் பிறப்பித்து வேல்ராஜை கைதுசெய்து நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

அதனடிப்படையில் வேல்ராஜ் கைது செய்யப்பட்டு இதே மாதிரி இன்னும் எத்தனைப் பேரிடம் வரம்பு மீறி உள்ளார் என்ற விசாரனையும் நடந்து வருகிறது. ஒரு வகையில் விபரம் தெரியாமல் கந்துவட்டியின் சதிவலையில் வீழ்ந்து விட்டாலும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்யாமல் காவல் துறை உயர் அதிகாரியை அணுகி பாதுகாவல் கோரியதற்காக ஆனந்த கோபாலை பாராட்டலாம்.

கந்து வட்டிக்காரர்களின் வரம்புமீறும் செயலுக்கு இந்திய சட்டம் துணை நிற்பதே முக்கியக் காரணமாகும் அரசு வங்கிகளைத் தவிற தனியார் வட்டி நிறுவனங்கள் தொகைக்கேற்ற அடமானப் பொருட்களின் பேரில் வருடத்திற்கு 9 சதவிகிதம் வட்டிப் பெறலாம் என்றும், அடமானப் பொருட்கள் அல்லாமல் கொடுத்தால் 12 சதவிகிதம் வட்டிப் பெறலாம் என்றும் சட்டமிருப்பதால் கந்து வட்டிக் காரர்கள் எந்த அடமானப் பொருட்களும் பெறாமல் கடனைக் கொடுத்து விட்டு அதற்காக அதிக வட்டியை அவர்களே நிர்ணயம் செய்துகொண்டு அடியாட்களை அமர்த்திக்கொண்டு லோக்கல் போலீஸை கவனிக்க வேண்டிய முறையில் கவனித்துக்கொண்டு ரவுடியிஷத்தின் மூலமே அசலையும் வட்டியையும் பெறுகின்றனர்.

1957ல் இயற்றப்பட்ட தமிழ்நாடு கடன் கொடுப்போர் சட்டத்தின் 3வதுப் பிரிவில் கடன் பெற்றோரை  உடல் ரீதியாக, மன ரீதியாக தொந்தரவு செய்யாமல் கடனை வசூலிக்க வேண்டும் என்றும் மீறினால் மூன்று  ஆண்டுகள் சிறை தண்டனையும், முப்பது ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையும் விதிக்கப்படும் என்றும் சட்டமிருக்கிறது.

ஆனால் உடல் ரீதியாக, மன ரீதியாக கொடுத்த டார்ச்சரை சாட்சி இல்லை என்று வக்கீலை வைத்து நிராகரிக்கலாம் என்பதால் தான் ஜெயலலிதா ஆட்சியில் கந்து வட்டிக்கு சட்டத் திருத்தம் கொண்டு வராமல் தடுப்புச்சட்டம் இயற்றி மொத்த கந்து வட்டியையும் தடைசெய்தார். ஆட்சி மாறியதும் தடுப்புச் சட்டம் செயலிழந்து முந்தைய சுரண்டல் சட்டம் தாமாக அமலுக்கு வந்து விட்டது.

மனிதர்கள் இயற்றிய இந்த சட்டங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாற்றம் பெறும் அவ்வாறு மாற்றம் பெறும் பொழுதெல்லாம் மனித சமுதாயத்தில் ஒரு சாராருக்கு அது ஆதரவாகவும் மற்றொரு சாராருக்கு பாதகமாகவும் அமைந்து விடுவதை மேற்காணும் நிகழ்வுகள் மூலம் பார்க்கிறோம் ஆனால் உலக அதிபதி ஏகஇறைவனின் சட்டம் உலகம் முடியும் காலம் வரை எந்த ஒரு சாராருக்கும் பாதகமில்லாமல் அனைவருக்கும் சாதகமாகவே இருக்கும் என்பதற்கு வட்டியை அழித்து தேவையுடையோருக்கு தர்மத்தையும், வட்டியில்லாக் கடனையும் கடமையாக்கி திருப்பிக் கொடுக்க முடியாதோருக்கு விட்டு விடும்படிக் கூறிய கருணையாளன் அல்லாஹ்வின் சட்டம் மகத்துவமானது.

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். திருக்குர்ஆன் 2:276. 

அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான்... திருக்குர்ஆன் 2: 245.

அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது. திருக்குர்ஆன் 2:280.

மேற்காணும் வேதவாக்கு சட்டமாக அமல் படுத்தப்படும் நாடுகளில் மேற்காணும் சித்ரவதைகள் கடன் பெறும் ஏழைகளுக்கு நிகழ்வதில்லை.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

يَمْحَقُ اللّهُ الْرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللّهُ لاَ يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

2:276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்

வட்டி...வட்டி...வட்டி...

அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியைக் கட்ட முடியாமல்  அட்டிகையை விற்று வட்டியைக் கட்டினேன் .  பழமொழி

அட்டிகையை விற்றும் வட்டிக் கணக்கு முடியாமல் புட்டி விஷத்தில் மொத்தக் கணக்கையும் முடித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோப் பேர்.

உங்கொப்பன் செத்தால் என்ன ? நீ வட்டியைக் கட்டு, உன் கணவன் செத்தால் என்ன ? நீ வட்டியைக் கட்டு என்று கல்நெஞ்சர்கள் மனைவிப் பிள்ளைகளை விரட்டுவார்கள் என்பதால் அவர்கள் வாயிலும் விஷத்தை ஊற்றி என்னுடன் அழைத்துச் சென்று விட்டேன் என்று வட்டிக்கடன் அடைக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டவர்களின் காலுக்கடியில் இருக்கும் கடிதத்தில் மேற்காணும் விதம் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

வட்டியால் அழிந்து கெட்டவர்களே அதிகம்.

வட்டிக் கொடுமையால் பல தொழில் நிருவனங்கள் மூடப்பட்டு அதன் அதிபர்கள் எஸ்கேப், அல்லது சூஸைட்.

இன்னும் 

வட்டிக் கொடுமையால் சின்னஞ்சிறு நாடுகள் கடன் பெற்ற நாடுகளின் (திரைமறைவில்) காலணி நாடுகள்.

இன்னும்

வட்டியின் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைத்துக்கொண்ட ஆஹா, ஓஹோ நாடுகளின் அடித்தளம் இன்றுக் காலி. 

1400 வருடங்களுக்கு முன்னரே வட்டி எனும் தீமை வளர்வதுப்போல் தெரிந்தாலும் அதன் இறுதிப் பலன் அழிவையேத் தரும் என்று அறிவின் பொக்கிஷம் அன்னல் நபி(ஸல்) அவர்கள் கூறிச் சென்றார்கள். நிச்சயமாக வட்டிப்பொருள் வளர்ந்த போதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம் தான். என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்னுமஸ்ஊத் (ரழி). திர்மிதி, நஸயீ

திருக்குர்ஆன் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதற்கு 1400 வருடத்திற்கு முன்பு இறக்கி அருளிய திருக்குர்ஆன் முழங்கிய வட்டியின் தீமைகள் பற்றிய எச்சரிக்கைகள் இன்று நம் கண் முன் நிகழும் பேரழிவுகள் பெரிய எடுத்துக் காட்டாகும்.

மனித குலத்தைப் பெரும் அழிவில் ஆழ்த்தும் வட்டி எனும் தீமையை தடுத்து நிருத்துவதற்காக அதை பெரும் பாவங்களின் பட்டியலில் இஸ்லாம் சேர்த்து. அந்தப் பெரும் பாவத்தை செய்பவர்களுக்கு ரைட் அன்ட் லெஃப்டாக துணை நிற்பவர்கள், அதில் பணி புரிபவர்கள் அனைவரையும் பாவத்தில் இழுத்துப்போட்டது இஸ்லாம். வட்டியைப் புசிப்பவன், அதனைப் புசிக்கச் செய்பவன், அதற்காக கணக்கு எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறுபவர்களை  பெருமானார் (ஸல்) அவர்கள்  சபித்துவிட்டு அத்தனை பேரும் குற்றத்தில் சமமானவர்கள்  என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்.

இன்று வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வங்கிகளில் பணிபுரிவதற்கு மறு உலக வாழ்வை நம்பி வாழும் முஸ்லீம்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு இஸ்லாம் தடுத்த வழியில் பொருளீட்டுவதற்கு ஆர்வம் காட்டும் மக்கள் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்பு செய்து விட்டார்கள். மக்களுக்கு ஒரு காலம் வரும் அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா ? ஹராமானதா ? முறையானதா ? முறையற்றதா ? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். என்று நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்: அபூஹுரைரா (ரழி) புகாரி.

இவர்கள் எந்தக் காற்றில் பறக்க விட்டார்கள் வட்டியைப் புசிப்பவன் அதனைப் புசிக்கச் செய்பவன், அதற்காக கணக்கு எழுதுபவன், குற்றத்தில் சமமானவர்கள்  என்று இஸ்லாம் கூறும் தீர்ப்பை என்றுத் தெரியவில்லை

இதை நிர்பந்தம் என்று சொல்வார்களா ? 
எது நிர்பந்தம் என்று இறைவனுக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனரா ?

அனுமதிக்கப்பட்ட எந்த ஒன்று எங்கு அறவே கிடைக்க வில்லையோ அங்கு மட்டுமே அது நிர்பந்தம்.

இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் இறைவனால் அனுமதிக்கப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இயங்கும் தொழில் நிருவனங்களில் நல்ல வேலையுடன் நல்ல சம்பளத்தில் அல்லாஹ் நமக்கு நாடுவான் என்ற சிந்தனை வரவேண்டும் காரணம் பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கி;ன்றான். 2:153.நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வங்கிகளில் பணிபுரிந்து அதன் சம்பளத்தில் தானும் உண்டு, தன்னை ஈன்றோர் சான்றோர் அனைவரையும் உண்ணச் செய்யும் சகோதரர்களே ! இன்னும் அதில் இணைவதற்காக ஆர்வம் காட்டும் சகோதரர்களே! அண்ணல் நபி(ஸல்) அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட மக்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் என்ற நபிழத்தோழர் வாழ்க்கையில் நடந்த  ஒரு சம்பவத்தைப் படியுங்கள்.

நான் மதீனாவின் (மஸ்ஜிதுந்நபவி) பள்ளிவாசலில் (நபித்தோழர்கள் சிலருடன்) அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் தம் முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளத்துடன் உள்ளே வந்தார். மக்கள், 'இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். அவர் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்; அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார். பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று, 'நீங்கள் பள்ளி வாசலுக்குள் நுழைந்தபோது மக்கள், 'இவர் சொர்க்கவாசி' என்று கூறினர்'' என்றேன். அதற்கு அவர் கூறினார்: அல்லாஹ்வீன் மீதாணையாக! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையல்ல. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக்கொள்கிறார்கள்) என்று உங்களுக்கு இதோ தெரிவிக்கிறேன். அதாவது, நான் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பது போன்று கண்டேன் - அறிவிப்பாளர் கூறுகிறார்: அம்மனிதர் அதன் விசாலத்தையும் பசுமையையும் வர்ணித்தார் - அதன் நடுவே இரும்பாலான தூண் இருந்தது. அதன் அடிப்பகுதி பூமியில் இருந்தது. மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் மேற்பகுதியில் பிடி ஒன்று இருந்தது. என்னிடம், 'இதில் ஏறு'' என்று சொல்லப்பட்டது. நான், 'என்னால் இயலாதே'' என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள் ஒருவர் வந்து என் ஆடையைப் பிடித்துப் பின்னாலிருந்து உயர்த்திவிட்டார். உடனே நான் (அதில்) ஏறினேன். இறுதியில் அதன் மேற்பகுதிக்கு நான் சென்றுவிட்டபோது அந்தப் பிடியை நான் பற்றினேன். உடனே என்னிடம், 'நன்கு பற்றிப் பிடித்துக் கொள்'' என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றினேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க (திடுக்கிட்டு) நான் விழித்தெழுந்தேன். நபி(ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, 'அந்தப் பூங்கா இஸ்லாமாகும். அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறை நம்பிக்கை என்னும்) பிடியாகும். எனவே, நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்'' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள் (இப்படிச் சொன்ன) அந்த மனிதர் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) தாம். கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார். புகாரி 3813.

மேற்காணும் அப்துல்லாஹ் இப்னு சலாம் என்ற நபித் தோழர் பெருமானார் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் பொழுது அவர்கள் கண்ட கணவுக்கு நீங்கள் இறக்கும் காலம்வரை தீனுடைய மார்க்கத்தில் நிலைத்து நிற்பீர்கள் இறைநம்பிக்கை குறையாதவராக வாழ்வீர்கள் என்று விளக்கமளித்தார்கள். 

பெருமானார் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் அந்த நபித்தோழர் சிறிதளவும் கூட இறைநம்பிக்கை குன்றாதவராகவே வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் என்பதற்கு கீழ்காணும் சம்பவமும் உதாரணமாக அமைகிறது.

நான் மதீனாவுக்கு வந்து அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் (என்னுடன்) வர மாட்டீர்களா? உங்களுக்கு நான் மாவையும் பேழீச்சம் பழத்தையும் உண்ணத் தருவேன். நீங்கள் நபி(ஸல்) அவர்கள் வருகை தந்த என்) வீட்டிற்கு வந்ததாகவும் இருக்குமே'' என்று கேட்டார்கள். பிறகு, 'நீங்கள் வட்டி மலிந்துள்ள (இராக்) நாட்டில் வசிக்கிறீர்கள். உங்களுக்கு ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்து. அவர் ஒரு வைக்கோல் போரையோ, வாற்கோதுமை மூட்டையையோ, கால்நடைத் தீவன மூட்டையையோ அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அதுவும் வட்டியாகும்'' என்று கூறினார்கள். 3814. அபூ புர்தா ஆமிர்(ரஹ்) அறிவித்தார்.

அதாவது அபூ புர்தா ஆமிர்; அவர்கள் வட்டிக்குக் கொடுத்து வாங்கவில்லை மாறாக வட்டிப் புழக்கத்தில் இருக்கும் நாட்டில் குடி இருந்தார்கள் அங்கு அவர்கள் தொடர்ந்து குடி இருப்பதை நேரடியாக தடுக்காமல் மறைமுகமாக மாரக்க உபதேசத்தின் மூலமாக தடுக்கின்றார்கள்.

ஏன் என்றால் ?

வட்டிப் புழங்குகின்ற ஊரில் குடி இருந்தால் எந்த வழியிலாவது வட்டி உணவில் கலந்து விடும் என்பதை பெருமானார்(ஸல்) அவர்கள் வாயிலாக அறிந்திருந்தார்கள்.

ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவர்கள் மிகைத்திருப்பார்கள் வட்டி உண்ணாதிருப்பவர் மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

இன்று நாம் வாழும் காலத்தில் நம் கண் முண்ணேப் பார்க்கின்றோம் வங்கிகளுக்கு சவால் விடும் அளவுக்கு வட்டிப் பல பெயர்களில் வங்கிகளுக்கு வெளியில் பவனி வருகின்றது.

  • இன்ஷூரன்ஸ் அறிமுகப்படுத்தும் போனஸ் என்றப் பெயரில் வட்டி.
  • கன ரக வாகனங்கள் முதல் மித ரக வாகனங்கள் வரை, பாத்திரம் பண்டங்கள் வரை தவனை முறையில் பணம் செலுத்தும் இன்ஸால்மென்ட் என்றப் பெயரில் வட்டி.
  • ஏலச் சீட்டு என்றப் பெயரில் கர்ண கொடூரமான வட்டி.
  • சாதாரண மளிகைக் கடையில் தினந்தோறும் காசு கொடுத்து வாங்குபவருக்கு ஒரு ரேட் .
  • மாதம் முடிந்து காசுக் கொடுப்பவருக்கு ஒரு ரேட் என்று பகிரங்க வட்டி.
இப்படி வட்டி மலிந்து விட்ட ஊரில் குடி இருந்தால் எதாவது ஒரு வழியில் வட்டிப் புகுந்து விடுவதால் அதில் மாட்டிக் கொண்ட ஒருவர் நமக்கு நெருக்கமானவராக இருந்து விட்டால் அவருடைய உணவின் மூலம் அது நம்மிலும் பகுந்து கொள்வதற்கு பெரிதும் வாய்ப்பிருக்கிறது என்பதால் தான் வட்டி உண்ணாதிருப்பவர் மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்றப் பெருமானார் (ஸல்) அவர்களுடைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு இராக்கில் குடி இருக்கும் தமது தோழர் அபூ புர்தா ஆமிர்; அவர்களை அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் எச்சிக்கின்றார்கள்.  

நல்ல வேலை, நல்ல சம்பளம் இதை விட்டால் இதைப்போன்று வேரொன்று அமைவதுக் கஷ்டம் என்ற முடிவுக்கு வந்து இஸ்லாமிய ஏவல் - விலக்கல் சட்டங்களை காற்றில் பறக்க விட்டுப் பொருளீட்ட முடிவு செய்து விடுகின்றனர். 
 
5: 62. அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும், தடுக்கப்பட்டதை உண்பதற்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.

இஸ்லாம் என்பது இவர்களுடைய வீட்டின் கத்னா, காது குத்து, கல்யாணம் போன்ற வைபவங்களுக்கும், திருக்குர்ஆன் அவர்களுடைய வீட்டு அலமாரியை அலங்கரிக்கவுமேப் பயன்படுகிறது.

இவ்வாறு முறையற்று ஈட்டுகின்ற வருமானத்தில் இவர்கள் மட்டும் உண்டு பாவத்தாளியாவதில்லை, மாறாக இவர்களின் கீழ் உள்ள பொறுப்பாளிகளாகிய மனைவி, பிள்ளைகளுக்கு உண்ணச் செய்கின்றனர் உன்னதமான கல்வியைப் புகட்டுகின்றனர், இன்னும் இவர்களை ஹலாலான முறையில் பொருளீட்டிப் படிக்கவைத்த தாய் தந்தையருக்கும் அவர்களுடைய வயதான காலத்தில் வட்டித் தொழில் சம்பளத்திலிருந்தே உண்ணக்கொடுக்கின்றனர்.

இவ்வாறு இவர்கள் உண்பதிலும் இவர்களை ஈன்றோர், சான்றோரை உண்ணச்செய்வதனாலும் அதிலிருநு;து வளரும் அவர்களுடைய கொழுத்த சதைப் பிண்டங்கள் நரக நெருப்பிற்கு எரி பொருளாக தயாராகிறது என்று பெருமானார் அவர்கள் எச்சரித்தார்கள்.
'வட்டியின் மூலம் கிடைத்த ஒரு திர்ஹம் முப்பத்தி ஆறு விபச்சாரத்தை விட அல்லாஹ்விடம் மிகக் கொடுமையானது என்றும்இ ஒருவனுடைய மாமிசம்இ (அல்லாஹ்வால்) தடுக்கப்பட்ட ஒன்றின் (வட்டியின்) மூலம் வளர்ச்சியடைந்தால் அதற்கு நரகமே மிக ஏற்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)இ ஆதாரம் : தப்ரானி

வட்டியை இறைவன் தடைசெய்து தர்மத்தை இறை நம்பிக்கையாளர்களிடம் வளர்த்ததாக கூறுகின்றான் இதை மறுப்போர், அல்லது இதற்கு துணை நிற்போர், அதில் ஊழியம் செய்து கூலிப் பெறுவோர் அனைவரும் இறைவனுக்கு நன்றிக் கெட்டவர்கள், நன்றிக் கெட்டவர்களை இறைவன் நேசிப்பதில்லை 2:276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்